உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஸ் துபேவை ஜூலை 2ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது, ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டு காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்து வன்மையாக கண்டித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, விகாஸ் துபேவை பிடிக்க சிறப்புக் குழுக்கள் அமைத்தது. இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முன்கூட்டியே விகாஸிடம் தகவல் தெரிவித்த சவுபேபூரின் ஆய்வாளர் வினய் திவாரி, துணை ஆய்வாளர் கே.கே. சர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, சவுபேபூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த 68 காவல்துறையினர் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபேவின் கூட்டாளிகள் அக்னி கோத்ரி, பிரேம் பிரகாஷ் பாண்டே, அதுல் துபே, விகாஸின் நெருங்கிய உறவினர் சாமா, விகாஸ் துபே வீட்டில் பணிபுரிந்த ரேகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கான்பூர் மற்றும் பரிதாபாத் பகுதியில் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் (எஸ்.டி.எப்) நடத்திய தேடுதல் வேட்டையின்போது, காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற விகாஸின் கூட்டாளி அமர் துபே காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று வரை காவல்துறையின் பிடியில் சிக்காமல் தப்பித்து வரும் விகாஸ் துபே, நேற்று முன்தினம் (ஜூலை 7) அவரது உறவினர் வீட்டில் தங்கி விட்டு, அருகிலிருக்கும் ஹோட்டலில் தங்குவதற்கு திட்டமிட்டார்.