தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 11, 2020, 11:07 PM IST

ETV Bharat / bharat

ரஷ்யாவில் இந்தியா-சீனா பேச்சுவார்த்தை - நான்கு முக்கிய அம்சங்கள்

ரஷ்யாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் இந்தியா-சீனா பேச்சுவார்த்தை நடத்தியதன் முக்கியத்துவம் குறித்து மூத்த செய்தியாளர் சஞ்சய் கே. பருவா எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம்.

இந்தியா-சீனா
இந்தியா-சீனா

புதுடெல்லி: 2020 ஏப்ரல்-மே மாதங்களில் இருந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் இராணுவ பதற்றம் மற்றும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தற்போதுள்ள அனைத்து ஆலோசனை வழிமுறைகளின் தோல்வி, இந்திய-சீன வெளியுறவு அமைச்சர்களின் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஆகியவற்றுக்கிடையே வியாழக்கிழமை மாலை மாஸ்கோவில் நடந்த இந்தியா, சீனா இடையிலான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், ஆசியாவின் இருபெரும் அணு ஆயுத நாடுகளுக்கு இடையில் அதிகரித்துவரும் ஆயுத மோதலுக்கான வாய்ப்புகளை குறைப்பது மட்டுமன்றி வெளிப்படையான உலகளாவிய தாக்கங்களைக் ஏற்படுத்தும், அதிகரித்துவரும் போர் மூளும் சூழலையும் தவிர்க்கும்.

இந்தப் பின்னணியில், வியாழக்கிழமை மாலை கூட்டத்திற்குப் பிறகு மாஸ்கோவிலிருந்து வெளிவந்த கூட்டு அறிக்கையும் அதற்கு முந்தைய செயல்முறையும், தார்மீக நோக்கங்களின் தெளிவான அறிவிப்பைத் தவிர வேறு சில நோக்கங்களையும் உள்ளடக்கியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

பேச்சுவார்த்தைகளை அதிகரித்தல்

இப்போது இவை அனைத்தும் உயர்மட்ட அரசியல் தலைவர்களின் பொறுப்பில் இருக்கிறது. மோடி- ஜின்பிங் வழிமுறையைத் தவிர, மற்ற எல்லா வழிமுறைகளும் முயற்சிக்கப்பட்டு, சோதிக்கப்பட்டு, அவை தோல்வியும் அடைந்தன என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன என்று ஆகஸ்ட் 20 அன்று ஈடிவி பாரத் கூறியிருந்தது.

உண்மையில், ஒரு வகையில் கடந்த காலத்தின் காலனித்துவ அடிப்படையிலான இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைகளின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு பார்த்தால், ராணுவ அல்லது ராஜதந்திர தலையீடுகள் ஆகியவை எதுவும் செய்ய முடியாது. இரு நாடுகளின் மிக உயர்ந்த அதிகார மட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே நீண்டகால பிரச்னையைத் தீர்க்க தேவையான வழிமுறைகளும் அதிகாரமும் உள்ளது.

உண்மையான கட்டுப்பாட்டு கோடு பற்றிய தற்போதைய விவகாரங்கள் 50களின் பிற்பகுதியில் அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, சீன பிரதமர் சூ என் லாய் ஆகியோரின் முயற்சிகள் தோல்வியடைந்ததன் காரணமாக விளைந்தவை. அந்த முயற்சிகள் தோல்வியுற்றதால், ​​1962ஆம் ஆண்டு போர் தொடங்கியது.

அதனால்தான் இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையில் எட்டப்பட்ட முக்கியமான ஒருமித்த கருத்தை, இரு தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என்று கூட்டு அறிக்கையின் முதல் அம்சம் கூறுகிறது. வூஹான் மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் நடந்த மாநாட்டின் நோக்கத்தின் தொடர்ச்சியாக, வரும் நாட்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான உச்சிமாநாடு அளவிலான பேச்சுவார்த்தைகளை நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

ரஷ்யாவின் எழுச்சி

இரண்டாவதாக, ரஷ்யாவின் ஒரு ராஜதந்திர ரீதியிலான சமரசம் செய்து வைக்கும் கூற்று மிகவும் தெளிவாக உள்ளது. உலக நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மத்தியில் ரஷ்யாவின் மதிப்பு இதன் மூலம் அதிகரிக்கும்..

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) சந்திப்பு நடந்த கடந்த சில நாட்களில், இந்தியா மற்றும் சீனாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து பேசி பதற்றங்களை குறைத்துள்ளனர். குறிப்பாக, இவை அனைத்தும் மாஸ்கோவில் நடந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமரசம் செய்து வைக்க தயார் என்று கூறிய சூழலில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை சீனா மறுத்திருந்தாலும், இந்தியா அதை கண்ணியமாக புறக்கணித்துவிட்டது.

உலகளாவிய அரங்கில் அனைத்து இடங்களிலும் சமரசம் செய்ய பொறுப்பேற்கும் ரஷ்யாவின் இந்த முயற்சிகளின் பின்னணியில், சோவியத் ஒன்றியத்தின் (USSR) வீழ்ச்சிக்குப் பிறகு இழந்த தனது பெருமைகளை மீண்டும் பெறுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்.

குவாட் அமைப்பின் நிச்சயமற்ற நிலை

மூன்றாவதாக, குவாட் அமைப்பு உருவாக முக்கியமாக இருந்த ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவின் திடீர் ராஜினாமாவுக்குப் பின்னர் ஏற்கனவே அழுத்தத்தில் இருக்கும் பிரபலமான குவாட் அமைப்பை கட்டுப்படுத்த மாஸ்கோவின் கட்டுப்பாட்டின் கீழ் சீனாவுடன் பேசுவதற்கு இந்தியாவின் மவுனமான ஒப்புதல் ஏற்றுக்கொள்ளப்படலாம். குவாட் அமைப்புக்கான இதுபோன்ற சிக்கல்கள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முன்னேற்றங்களில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

ஆஸ்திரேலியா தனது பால் மற்றும் வேளாண் பொருள்களை சந்தைப்படுத்த சீனாவை அதிகமாக நம்பியிருப்பதால் 'குவாட்' அமைப்பு குறித்த சந்தேகங்கள் அதிகரிக்கின்றன.

ஈரானிய கோணத்திலிருந்து

நான்காவதாக, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் ஈரானின் தெஹ்ரானில் குறுகிய நேரம் தங்கியது பலரையும் ஆச்சர்யப்படுத்த தவறவில்லை. இதன் விளைவாக, கொள்கை மாற்றத்தை நோக்கி இந்தியா செல்கிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ஏனெனில் நவம்பரில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்றால், அதன் பிறகு ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் கடுமையாக இருக்க வாய்ப்பில்லை.

கடந்த ஆண்டு முதல், ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்ததை இந்தியாவும் கடைப்பிடித்ததால், இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பாரம்பரிய நெருக்கமான உறவுகள் பெருமளவில் பாதிப்யடைந்தன. அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியாவின் காஷ்மீர் கொள்கை குறித்து ஈரான் இந்தியாவை கடுமையாக விமர்சித்தது.

ஈரானுடனான சிக்கல் காரணமாக ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவிற்கான இந்தியாவின் நேரடி வர்த்தக அணுகலை வழங்கியிருக்கும் சபாஹர் துறைமுகத்தில் இந்தியாவின் செயல்பாட்டிற்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தத்தில், ரஷ்யாவில் இந்தியா-சீனா பேச்சுவார்த்தைகள் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளுக்கிடையில் ஆயுத மோதலுக்கான வாய்ப்புகளை குறைப்பதோடு, உலகின் பல முக்கியமான நாடுகளின் புவிசார் அரசியல் உத்திகளை மாற்றுவதற்கும் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

ABOUT THE AUTHOR

...view details