கர்நாடகா மாநிலம் பெங்களூரின் புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தி என்பவரின் உறவினர் நவீன், இஸ்லாம் மதத்துக்கு எதிராகவும், நபிகள் குறித்து அவதூறாகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுதிவந்ததாக அறிய முடிகிறது. இது குறித்து காவல்துறையினரிடம் பலமுறை இஸ்லாமிய அமைப்பினர் புகார் செய்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 11ஆம் தேதியன்று கடுமையான வார்த்தைகளில் அவரது முகநூலில் பதிவொன்று வெளியிடப்பட்டதால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய அமைப்பின் ஒரு பிரிவினர், துணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று நவீன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தனர். இதனிடையே, இஸ்லாமிய அமைப்பின் மற்றொரு பிரிவினர் டிஜே ஹள்ளி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, காவல்துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் இது வன்முறையாக மாறியது. எம்.எல்.ஏ வீடு, காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை அடக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். வன்முறையில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டவர்களை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்தனர்.
பெங்களூரு கலவரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்றை வெளியிட்ட சமாஜ்வாதி கட்சி (எஸ்.பி.) பிரமுகர் ஷாஜீப் ரிஸ்வி, பெங்களூரு கலவரத்திற்கு காரணமான நவீன் தலைக்கு ரூ. 51 லட்சம் சன்மானம் வழங்குவேன் என உணர்ச்சியைத் தூண்டும் விதமாக பேசியது பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த காணொலி சமூக வலைதளங்களில் பரவலானதை அடுத்து லக்னோ காவல்துறையினர் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இது குறித்து மீரட் காவல்துறை கண்காணிப்பாளர் (கிராமப்புற) அவினாஷ் பாண்டே கூறுகையில், "பெங்களூரு வன்முறை தொடர்பாக மீரட்டைச் சேர்ந்த ஒருவர் ரூ. 51 லட்சம் பரிசு அறிவித்துள்ளார். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்" என தெரிவித்தார்.