நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக 2016 ஆம் ஆண்டில் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான அமைச்சகத்திலிருந்து வெளியேறிய ஏக்நாத் காட்சே (68), இரண்டு நாள்களுக்கு முன்பு பாஜக கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் (என்சிபி) இணைந்துகொள்வார் என்கிற தகவல் வெளியானது. சிவசேனா மற்றும் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள என்.சி.பி மாநிலத்தில் ஆளும் கட்சியாக திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும், மாநில சட்டசபையில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான காட்சே, என்சிபி அலுவலகத்திற்கு இன்று மதியம் வந்தடைந்தார். அப்போது, அவரை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் சால்வை அணிவித்து வரவேற்றார்.
இதுகுறித்து ஏக்நாத் காட்சே கூறுகையில், "கடந்த மூன்று சகாப்தங்களாக மகாராஷ்டிராவில் பாஜக கட்சியை வலுப்படுத்த முயன்று எனது வாழ்க்கையும், அரசியல் வாழக்கையும் வீணடித்துக்கொண்டேன்." எனத் தெரிவித்தார். பாஜகவின் மூத்த தலைவர் வேறு கட்சியில் இணைந்துள்ளது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.