தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவில் இணைந்த 24 மணி நேரத்திற்குள் அரசியலைவிட்டே விலகிய முன்னாள் கால்பந்து வீரர்! - மெஹ்தாப் ஹொசைன்

கொல்கத்தா: இந்தியாவின் முன்னாள் கால்பந்து வீரர் மெஹ்தாப் ஹொசைன் பாஜகவில் இணைந்து 24 மணி நேரத்திற்குள், சொந்த காரணங்களுக்காக அரசியலைவிட்டே விலகுவதாக அறிவித்துள்ளார்.

Former Indian footballer Mehtab Hossain
Former Indian footballer Mehtab Hossain

By

Published : Jul 23, 2020, 5:47 PM IST

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் மெஹ்தாப் ஹொசைன். நடுகள வீரரான இவர், இந்தியாவுக்காக 30 போட்டிகளில் விளையாடி இரண்டு கோல்களை அடித்துள்ளார்.

மேற்கு வங்கத்திலுள்ள மோஹுன் பாகன் கால்பந்து க்ளப்புக்காக விளையாடிவந்த இவர், 2018-19ஆம் ஆண்டு சீசனோடு கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தச் சூழலில் மெஹ்தாப் ஹொசைன், செவ்வாய்கிழமை மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், பாஜகவில் இணைந்து 24 மணி நேரத்திற்குள் அரசியலைவிட்டே விலகுவதாக மெஹ்தாப் ஹொசைன் அறிவித்துள்ளார். மேலும், தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியலைவிட்டு விலகி இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மெஹ்தாப் ஹொசைன் தனது பேஸ்புக் பக்கத்தில், "இன்று நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. இந்த முடிவுக்கு எனது நலம் விரும்பிகளிடம் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். யாரும் என்னை இந்த முடிவை எடுக்க வற்புறுத்தவில்லை. அரசியலைவிட்டு விலகி இருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட முடிவு.

இந்த நெருக்கடியான சூழலில் நான் மக்களுடன் இருக்க விரும்பகிறேன். எவ்வித உதவியுமின்றி தவிக்கும் மக்களை கண்டு நான் என் தூக்கத்தை முற்றிலும் இழந்துள்ளேன். அவர்களுக்கு உதவவே திடீரென்று நான் அரசியலில் இணைந்தேன். ஆனால், நான் யாருக்கு உதவ அரசியில் சேர்ந்தேனோ, அவர்கள் என்னை அரசியல்வாதியாக பார்க்க விரும்பவில்லை.

எனது இந்த திடீர்(அரசியல் ஈடுபாடு) முடிவை எனது மனைவியும் குழந்தைகளும் ஆதரிக்கவில்லை. எனது நண்பர்கள், ஆதரவாளர்களைப் போலவே அவர்களும் எனது முடிவால் காயமடைந்தனர். அவர்களின் சோகமான முகங்களை பார்த்து நான் மிகவும் துன்பமடைந்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இருப்பினும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் மிரட்டல் காரணமாகவே மெஹ்தாப் ஹொசைன் இந்த முடிவை எடுத்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது.

இதையும் படிங்க:கரோனா சிகிச்சை பெற்ற பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற மருத்துவர் கைது

ABOUT THE AUTHOR

...view details