ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்த நிலையில், சில மாநிலங்களில் கோயில்கள் திறக்கப்பட்டன. அந்த வகையில், கரோனா பொது முடக்க தளர்வுகளுக்குப் பின் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், கடந்த ஜூன் 8ஆம் தேதி முதல் சோதனைமுறையில் இரண்டு நாள்களுக்கு தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர்வாசிகளை தரிசனம் செய்ய அனுமதித்தனர்.
இந்த சோதனையை அடுத்து, ஜூன் 26 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தேவஸ்தானத்தின் முன்னாள் தலைமை அர்ச்சகர் சீனிவாச மூர்த்தி தீட்சிதுலுவுக்கு, நேற்றுமுன் தினம்(ஜூலை 18) கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் கழக (எஸ்.வி.எம்.எஸ்) மருத்துவமனையில் உடல்நிலை மோசமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி இன்று(ஜூலை 20) மாலை உயிரிழந்தார்.
உயிரிழந்த அவருக்கு நீரிழிவு நோயும், சிறுநீரக செயல் குறைப்பாடும் இருந்ததாகவும், அறிய முடிகிறது. அவர் பல நூற்றாண்டுகளாக திருமலை கோயிலுடன் தொடர்புடைய பரம்பரை அர்ச்சகராக விளங்கிவரும் நான்கு குடும்பங்களில் ஒன்றான அர்ச்சகம் பெடிண்டி குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.
இருபது ஆண்டுகளாகத் தலைமை அர்ச்சகராகப் பணியாற்றிவந்த அவர், முந்தைய தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பின் கீழ் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
உயிரிழந்த சீனிவாச மூர்த்தியின் இறுதி சடங்குகள் பரம்பரை அர்ச்சகர்களின் குடும்பங்களில் உள்ள பழக்கவழக்கங்களின்படி செய்யப்பட வாய்ப்பில்லை என்றும், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அகற்றுவதற்கான நெறிமுறையைப் பார்க்கும்போது, இறந்த சீனிவாச மூர்த்தியின் உடல் உடனடியாக தகனம் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தொடக்கத்தில் கோவிலை மூடும் திட்டத்தை நிராகரித்த தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி, தற்போது கோவில் தரிசனத்தை நிறுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில், கடந்த ஜூலை 16 ஆம் தேதி திருப்பதி கோவிலின் திருமலை கோவிலின் கவுரவ தலைமை அர்ச்சகர் ஏ.வி. ரமணா தீட்சிதுலு உள்ளிட்ட 140 ஊழியர்களுக்கு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.
இதனையடுத்து, சாமி தரிசனம் செய்வதைத் தடை செய்யவேண்டுமென கோரிக்கைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.