அதிபர்- பிரதமர் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரம் அருகேயுள்ள கோவளம் கடற்கரை அருகே உள்ள தாஜ் ஓட்டலில் நடந்தது. இதையடுத்து இருநாட்டுக் குழுவினரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இருநாட்டுத் தலைவர்களும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கலாசார உறவு உள்ளது. பருவநிலை குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர். வர்த்தகம் தொடர்பான நடைமுறைகளுக்காக இரு நாடுகளும் தங்களது நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளது.
சென்னையில் தூதரகம்
சென்னையில் சீன தூதரகம் அமைப்பது தொடர்பாக ஏற்கனவே புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துவருகிறது. காஷ்மீர் உள்நாட்டு விவகாரம் என ஏற்கனவே தெளிவுப்படுத்தி உள்ளோம். சீனா-இந்தியா இடையே எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்துவருகிறது.
வர்த்தகப் பற்றாக்குறை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே அடுத்தடுத்த சந்திப்புகள் நடைபெறவுள்ளன. பாதுகாப்புத் துறை குறித்து தலைவர்கள் நேரடியாக பேசும் வழக்கம் கிடையாது. இருநாட்டு ராணுவத்துக்கும் இடையேயான விரிசலை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.