கரோனா பாதிப்பின் காரணமாக பிரிட்டன் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு நிம்மதி அளிக்கும் விதமாக ஒரு முக்கிய முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. அந்நாட்டில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்கள் அனைவரின் விசா காலக்கெடுவை மூன்று மாதம் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 24ஆம் தேதிக்கு பின்னர் விசா காலக்கெடு முடிந்தவர்கள் வெளியுறவுத்துறையைத் தொடர்பு கொண்டு மே மாதம் 31ஆம் தேதிவரை விசாவை நீட்டித்துக்கொள்ளலாம்.
உலக அளவில் அனைத்து நாடுகளும் கரோனா பாதிப்பை தடுக்க லாக்டவுனை அறிவித்துள்ள நிலையில், விமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. பிரிட்டன் நாட்டில் இவ்வாறு சிக்கிக்கொண்ட நபர்கள் CIH@homeoffice.gov.uk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் காரணத்தை விளக்கி பெயர், விசா எண் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். அத்துடன் 08006781767 என்ற இலவச எண்ணை வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
மக்களின் உடல் நலம், நல்வாழ்வை மட்டுமே பிரிட்டன் அரசு முதன்மை கடமையாக கொண்டுள்ளது. எனவே, இந்தச் சூழலில் சிக்கியுள்ள நபர்களின் விசா காலக்கெடுவை நீடித்து அவர்கள் எந்தவித சிக்கலின்றி வாழ அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என பிரிட்டன் நாட்டின் உள்துறை செயலர் தெரிவித்துள்ளார்.