லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது இந்திய - சீன படைகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்தது.
இந்தத் தாக்குதலின்போது இந்திய வீரர்களைவிட சீன வீரர்கள் ஐந்து மடங்கு அதிகமாக இருந்தார்கள் என்று தகவல் வெளியானது. இதுதவிர இந்திய வீரர்கள் ஆயுதம் ஏதுமின்றி அங்கு சென்றனர் என்றும் தகவல் பரவியது. இது நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது வீரர்களை ஆயுதமின்றி அனுப்பிய காரணம் என்ன?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். ராகுல் காந்தியின் கேள்வி இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தற்போது விளக்கியுள்ளார்.
ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எல்லையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் வீரர்கள், குறிப்பாக ரோந்துக்கு செல்லும்போது ஆயுதங்கள் ஏந்திதான் செல்வார்கள். கல்வான் பகுதியில் சென்ற வீரர்களிடமும் ஆயுதங்கள் இருந்தன. 1996,2005ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி வீரர்கள் ஆயுதங்களை பயன்படுத்தவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இந்த மோதலில் சீனா தரப்பிலும் சுமார் 40 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குறித்த எந்தவொரு தகவலையும் இதுவரை சீனா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இதையும் படிங்க: சீனாவின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது - வெளியுறவுத்துறை அமைச்சகம்