கரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. புதுச்சேரியிலும் அதன் பாதிப்பு தீவிரமடைந்துவருகிறது. அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து காரைக்கால், மாஹே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
புதுச்சேரியில் இதுவரை 2,421 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 1,400 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 987 பேர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர். 34 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரேநாளில் 121 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் அதன் பரவலைக் கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மூன்று மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரி சட்டப்பேரவையின் நான்காவது கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதியன்று தொடங்கியது. புதுச்சேரி முதலமைச்சரும் நிதித் துறை அமைச்சருமான நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, கூட்டத்தொடரில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்தக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் பல சமூகநலத் திட்டங்களையும் அறிவித்துவருகிறார். அந்த வகையில் இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் கூட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ், அதிமுக, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பில் கருத்துகளும் தெரிவிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரி மாநிலத்தில் கரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை 9.16 கோடி ரூபாய் வந்துள்ளது. அதிலிருந்து, கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் நிதி வழங்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு தலா 700 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும்" என அறிவித்தார்.