நாட்டிலேயே முதல்முறையாக 21 வயது நிரம்பிய இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் மிக இளம் வயதில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்னும் அடையாளத்தைப் பெற்றிருக்கிறார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்யாவின் தந்தை ஒரு எலக்ட்ரீசியனாகவும், அவரது தாய் ஸ்ரீலதா எல்ஐசி முகவராகவும் பணிபுரிந்து வருகிறார்.
அண்மையில் கேரள மாநிலத்தில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் பெருவாரியான இடங்களில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் முடவான்முகல் என்னும் வார்டில் போட்டியிட்ட ஆர்யா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர் ஸ்ரீகலாவை விட 2ஆயிரத்து 872 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து ஆலோசித்து, ஆர்யா ராஜேந்திரனின் பெயரைப் பரிந்துரை செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆர்யாவை மேயராகத் தேர்ந்தெடுப்பதாக முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய ஆர்யா ராஜேந்திரன், 'நான் தற்போது கவுன்சிலராக இருந்து வருகிறேன். எனக்கு வழங்கப்பட்ட பதவியை வைத்து, பெண்களின் முன்னேற்றத்துக்கும் சமூக வளர்ச்சிக்கும் பாடுபடுவேன்' என்று தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்து புனிதர்கள் கல்லூரியில் கணிதத்துறையில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் ஆர்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சின் மாணவர் அமைப்பான பால சங்கத்தின் மாநிலத்தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஊடகங்களின் தவறான பரப்புரைக்கு மக்கள் பதிலளித்துள்ளனர்- பினராயி விஜயன்