நாட்டில் கடந்த 18 நாளாக பெட்ரோல், டீசல் விலைத் தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது. இதையடுத்து, இந்தியாவில் முதல்முறையாக பெட்ரோல் விலையைக் காட்டிலும் டீசல் விலை அதிகமாக இன்று விற்பனையாகிவருகிறது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.79.79ஆகவும், டீசல் 79.88 ஆகவும் விற்பனையாகிவருகிறது.
பொதுவாக பெட்ரோல் விலையைக் காட்டிலும் டீசல் விலை ஐந்திலிருந்து பத்து ரூபாய் குறைவாகவே விற்பனையாகும். கனரக வாகனங்கள், சரக்குப் போக்குவரத்து வாகனங்கள் பொதுவாக டீசல் மூலமே இயங்கக் கூடியவை.
இந்நிலையில், டீசல் விலை இத்தகைய வரலாறு காணாத உயர்வைச் சந்தித்துள்ளது, சரக்கு போக்குவரத்துத் துறையின் சுமையை அதிகரித்துள்ளது. இதன் தாக்கமாக பொருள்களின் விலைவாசி கணிசமாக உயரும் இடரும் எழுந்துள்ளது.
கரோனா பாதிப்பின் காரணமாக அரசின் வருவாய் பெரும் சுணக்கத்தைக் கண்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விற்பனை வரி மூலம் மத்திய, மாநில அரசுகள் அதிக வரி வருவாயைத் திரட்டிவருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ள சூழலும் சாதகமான பலனை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க யுக்டி 2.0 அறிமுகம்!