கரோனா பாதிப்பு தென் மாநிலங்களில் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், தெலங்கானாவில் பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்து 466ஆக உயர்ந்துள்ளது. அதில் 40 ஆயிரத்து 334 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 455 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை 1ஆம் தேதியிலிருந்து ஜூலை 25ஆம் தேதி வரையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையைக் கணக்கிட்டால் 37 ஆயிரத்து 720ஆக உள்ளது. இந்தப் புள்ளிவிவரத்தின்படி பார்த்தோமானால், தெலங்கானாவில் ஒரு நிமிடத்திற்கு ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதை அறிய முடிகிறது.
இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் தலைநகர் ஹைதராபாத் மட்டுமல்லாது தெலங்கானாவின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருவதுதான். ஹைதராபாத்தை ஒப்பிட்டால் அருகிலிருக்கும் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது.
ஆனால், இது அனைத்து மாவட்டங்களுக்கும் பரவுவதற்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. கரீம் நகர், நல்கொண்டா, நிஜாமாபாத், வாராங்கல் ஆகிய பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் 100ஐ கடக்கிறது.
இதனைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் சந்திர சேகர் ராவ், அனைத்து மாவட்டத்திற்கும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் பயணம் செய்து அந்தந்த மாவட்டங்களில் கரோனா பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்ய அறிவுறுத்தியுள்ளார். இதனால் சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேந்தர், காமரெட்டி, நிஜாமாபாத் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ''கிராமங்களில் கரோனா பரவலைத் தடுப்பதே முக்கிய நோக்கம். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட வாரியாக மருத்துவக் கண்காணிப்பாளர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது. அதேபோல் அரசு சார்பாக மாவட்டங்கள், கிராமங்கள் ஆகியவற்றில் செயல்பட்டவரும் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பற்றி விளக்கமளிக்கப்பட்டுவருகிறது.
இதனிடையே மாவட்ட வாரியாக மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர், பைப்லைன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன. அதேபோல் மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு தொற்றைக் கண்டறிவதற்கான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. கரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது'' என்றார்.
இதையும் படிங்க:'எங்கே மாஸ்க்... வா... போலீஸ் ஸ்டேஷனுக்கு' - ஆடுகளைக் கைது செய்த காவலர்கள்!