நாட்டின் ஐந்தாவது பெரிய தனியார் வங்கியான யெஸ் வங்கி கடந்த சில மாதங்களாகவே நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது. இந்நிலையில், யெஸ் வங்கியின் 49 விழுக்காடு பங்குகளை வாங்க எஸ்.பி.ஐ, எல்.ஐ.சி ஆகியவை முடிவு செய்துள்ளது. இந்த முடிவு வங்கியின் வைப்புத் தொகையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "2017ஆம் ஆண்டிலிருந்து, யெஸ் வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வந்தது. நிர்வாக குளறுபடி, தளர்த்தப்பட்ட விதிகள் ஆகியவை பிரச்னையாக இருப்பது தெரிய வந்தது. சொத்து மதிப்பை தவறாகப் பதிவு செய்தது, இக்கட்டான சூழ்நிலையில் முடிவுகள் எடுத்ததும் தெரியவந்தது.
வங்கிக்கு ஏற்பட்ட நிதிநெருக்கடி குறித்து ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கியை கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் அதனை உருவாக்கியவர்களை அடையாளம் காணவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வங்கியின் வைப்புத்தொகையாளர்களின் நலனைக் காக்க அரசு உறுதி பூண்டுள்ளது. தடைக் காலத்திற்குள் வங்கியை மீட்டெடுக்க திட்டம் வகுக்கப்படும் என ரிசர்வ் வங்கி உறுதியளித்துள்ளது. வைப்புத் தொகையிலும் கடன் தொகையிலும் பாதிப்பு ஏற்படாது. ஓராண்டு வரை வங்கி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். நிதி நெருக்கடியில் சிக்கத் தவித்த அனில் அம்பானி குழுமம், எஸ்ஸல், வோடஃபோன், டிஎச்எப்எல் ஆகிய நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி கடன் வழங்கியுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் உறுப்பினர்கள் சஸ்பெண்ட்: விசாரணை செய்யக் குழு ரெடி