வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, மத்திய அரசு சார்பாக 'வந்தே பாரத் மிஷன்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதல்கட்ட மிஷனில், மே 7ஆம் தேதி முதல் மே 16ஆம் தேதி வரை, 12 நாடுகளில் சிக்கியிருந்த 16 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
இதையடுத்து நடந்த இரண்டாம் கட்ட மிஷன் மே 17ஆம் தேதி முதல் ஜூன் 13ஆம் தேதி வரை செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 60 நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்துவரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, துபாயில் சிக்கித்தவித்து வந்த 180 இந்தியர்கள் ஏர் இந்தியா (IX 1611) விமானம் மூலம் இன்று கோவை சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினர். இவர்களில் 94 ஆண்கள், 66 பெண்கள், 17 குழந்தைகள், 3 கைக்குழந்தைகள் வந்ததாகவும், அதில் பெரும்பாலானோர் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் என விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விமான நிலையத்தில் உள்ள மருத்துவக் குழுவினர், அனைத்து பயணிகளுக்கும் பி.சி.ஆர் அடிப்படையிலான கோவிட் -19 கண்டறிதல் சோதனைகளை மேற்கொண்டு, அவர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்குத் தனிமைப்படுத்துதலுக்காக அனுப்பப்பட்டனர்.
மேலும் சோதனை முடிவில் கரோனா உறுதியாகும் பணிகளை உடனடியாக மருத்துவமனைக்கு, அழைத்துச் செல்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.