மத்திய அரசின் கீழ் இயங்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோரிமேட்டில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான புற மற்றும் உள் நோயாளிகளும், நூற்றுக்கணக்கான அவசர சிகிச்சை நோயாளிகளும் சிகிச்சைக்கு வந்துசெல்கின்றனர். தற்போது கரோனா நோய் தடுப்பு ஊரங்கு உத்தரவால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்த வைரஸை முழுமையாக குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுப்பிடிக்காதநிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.