டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால், அங்கு நவம்பர் 30 வரை பட்டாசு வெடிப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. அம்மாநில அரசு சார்பிலும் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
என்.சி.ஆர் பகுதியில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்து வருவதால் அங்கு பட்டாசு விற்பனையையும், வெடிப்பதையும் தடுக்க காவல் துறையினர் முடுக்கிவிடப்பட்டனர்.
இந்நிலையில், நொய்டா பூங்கா பகுதியில் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை 39 அட்டைப் பெட்டிகளில் விற்பனைக்கு வைத்திருந்த இருவரை காவல் துறையினர் கைது செய்ததுடன் பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்.
கைதான இருவரும் புலந்த்ஷர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் சைனி, காசிஃப் ஆகியோர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.