விநாயகர் சதூர்த்தி விழா நாடு முழுவதும் வரும் திங்கள் கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக நாட்டின் பல்வேறு நகரங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சிலை தயாரிக்கும் பணிகளில் முழுவீச்சில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அதனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்காக சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்கள் விழாக் கோலம் பூண்டுள்ளன. இதிலும் குறிப்பாக மும்பை நகரம் விநாயகர் சதூர்த்திக்கு பெயர்போனது. அந்த வகையில், பல அடி உயரத்தில் செய்யப்படும் பிரமாண்ட சிலைகளை நிறுவி கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.
மும்பையின் லால்பாக் பகுதியில் ஆண்டுதோறும் நிறுவப்படும் லால்பவுச்ச ராஜா சிலை மிகவும் பிரபலம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சிலையானது தொடர்ந்து 11 நாட்கள் வைக்கப்பட்டு பின்னர் அரபிக்கடலில் கரைக்கப்படுகிறது. லால்பவுச்ச ராஜ கணபதி சிலையை கம்ப்ளி என்றறியப்படும் குடும்பத்தினர் சுமார் 8 தலைமுறைகளாக ஆண்டுதோறும் நிறுவுகின்றனர்.
மும்பை மாநகரில் பிரமாண்ட ராஜ கணபதி சிலை இந்த ஒரே விநாயகர் பக்தர்களின் அனைத்து வித வேண்டுதல்களையும் நிறைவேற்றி வைப்பார் என்று அங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்தி திருவிழாவிலும் ராஜ கணபதி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் சிலை நிறுவப்பட்டது. இதற்கான ஃபர்ஸ்ட்லுக் வீடியோ வெளியிடப்பட்ட நிலையில் தற்போது வைரலாகி வருகிறது.