உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பாதிப்பால் இதுவரை 156 நாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்து 48 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் உறுதிசெய்துள்ளது.
சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய இந்தக் கொடிய வைரஸ் ஐரோப்பிய, மத்தியக் கிழக்கு நாடுகளில் தீவிரமாகி, கடந்த 10 நாள்களாக அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், இத்தாலி, தென்கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் இந்த வைரஸ் பெருந்தொற்றால் 194 பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களை காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன.
இருப்பினும், அதன் தாக்கம் நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தற்போது குஜராத்தில் இந்த வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. நேற்று புதிதாக இருவருக்கு கோவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
குஜராத்தை அச்சுறுத்தத் தொடங்கியுள்ள கரோனா வைரஸ்! இது தொடர்பில் குஜராத் மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஜ்கோட், சூரத் ஆகிய இரு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றால் இரண்டு நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுகாதார அலுவலர்கள் குழு அவர்களுக்குரிய மருத்துவ சிகிச்சைகளை அளிக்கத் தொடங்கி உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்திய அளவில், மகாராஷ்டிரா மாநிலம் கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பால் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.