உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக இந்திய மக்களவைத் தேர்தல் கருதப்படுகிறது. இந்நிலையில், 17ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. இதில் பாஜக 303 இடங்களில் வெற்றி வாகை சூடி தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் கேபினெட் அந்தஸ்து கொண்ட மத்திய அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்ட 24 பேர், இணை அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்ட 24 பேர், தனிப் பொறுப்பு வழங்கப்பட்ட 9 பேர் என மொத்தமாக 57 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.