இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையானது, பல்வேறு அமைச்சங்கள்/ துறைகளில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற மத்திய அரசு ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்த ஆலோசகர்களாக நியமிக்கின்றது. ஆனால், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சம்பளத்தை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.
எனவே, தற்போது ஓய்வுப்பெற்ற மத்திய அரசு ஊழியர்களை நியமனம் செய்தால் சம்பள கொடுப்பனவுகளுக்கான வரைவு விதிமுறைகளை செலவினத் துறை வகுத்துள்ளது. அதன் மீதான அமைச்சங்கள்/ துறைகளின் கருத்துக்களை 10 நாள்களுக்குள் முன்வைக்க அழைத்துள்ளது. ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களின் ஒப்பந்த நியமனத்தின் சம்பளத்தை ஒழுங்குபடுத்துவதற்கு சீரான தன்மை தேவை என்று உணரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த கால சேவையின் நற்சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டே ஓய்வுப் பெற்ற ஊழியர்கள் ஒப்பந்த நியமனம் செய்யப்படுவர். விளம்பரம் மூலமாக நியமனம் செய்யப்பட வாய்ப்பில்லை. அலுவலகப் பூர்வ பணிகளுக்கு மட்டுமே நியாயமான தேவைகளின் அடிப்படையில் இத்தகைய நியமனங்கள் செய்யப்பட வேண்டும்.