துபாயிலிருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியதில் இரண்டு துண்டாக உடைந்தது.
இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட கோழிக்கோடு வருகை தந்தார். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பயணிகளை சந்தித்தும் உரையாடினார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " மொத்தமாக 149 பயணிகள் வெவ்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மூன்று நபர்கள் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர்.
விமான விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது. விமானத்தின் கருப்பு பெட்டிகளை ஆய்வு செய்து விபத்துக்கான காரணம் அறியப்படும். மேலும், இந்த விபத்து தொடர்பான விசாரணை முழுவதும் பகிரங்கப்படுத்தப்படும்" எனப் பதிவிட்டுள்ளார்.