சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆர். ஞானசேகரன் தாக்கல்செய்த மனுவில், "ஊழலை ஒழிக்க வகைசெய்யும் லோக் ஆயுக்தாவை அமல்படுத்தக் கோரி புதுச்சேரியில் உள்ள தலைமை அஞ்சலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி துணைநிலை ஆளுநரிடம் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி மனு அளித்தேன்.
ஆளுநர் அலுவலகத்தில் இருந்து காவல் துறையை அணுக அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிராண்ட் பஜார் காவல் நிலையத்தில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி வழங்க விடுத்த கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் 2019 பிப்ரவரி 13ஆம் தேதி லோக் ஆயுக்தாவை அமல்படுத்த வலியுறுத்தி, அனுமதி இல்லாமல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இல்லம் முன் முதலமைச்சர் வி. நாராயணசாமி உள்ளிட்டோர் ஆறு நாள்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சர் வி. நாராயணசாமி இல்லத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட என்னை பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி காவல் துறையினர் கைதுசெய்தனர். ஆனால், முதலமைச்சர் வி. நாராயணசாமி உள்பட தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.