ராணுவ அலுவலர் ஒருவர் தனது மனைவி சக அலுவலருடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருக்கிறார் எனக் கூறி, தங்களுக்கு பிறந்த இரு குழந்தைகளையும் (ஆண், பெண்) தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார்.
அதன் பின்னர் ராணுவ அலுவலரின் மனைவி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை வழக்குரைஞர் வாயிலாக தாக்கல் செய்தார். அந்த மனுவில், “2017-18 கல்விக் கூட்டம் முடிந்ததும் குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், ராணுவ அலுவலரின் மனைவிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராணுவ அலுவலர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை (ஏப்29) உறுதி செய்தது. நீதிபதி தனது தீர்ப்பில், “லாக்டவுன் முடிந்த பின்னர் குழந்தைகளை பெற்ற தாயிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் நீதிபதி நவீன் சாவ்லா பொதுவான கருத்துகளையும் பகிர்ந்துக் கொண்டார். அவர் தனது தீர்ப்பில், “பெற்றோரின் அன்பே உண்மையான தன்னலமற்ற, நிபந்தனையற்ற ஒரே அன்பு. இருப்பினும், பெற்றோர் சண்டையிடும்போது, தாங்கள் மட்டுமல்ல தங்கள் குழந்தைகளின் உளவியல் நல்வாழ்விலும் விரிசல்களை உருவாக்குகிறார்கள்.
இது முற்றிலும் எதிர்பாராதது. ஆனால் இதுதான் வாழ்க்கையின் கடுமையான உண்மை. தற்போதைய வழக்கு இதேபோன்ற சூழ்நிலையை குறிக்கிறது. குழந்தைகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டு கல்விச் சான்றிதழ்கள் அனைத்தையும் தாயிடம் ஒப்படைக்க வேண்டும். இதன்மூலம் டெல்லியில் ஏதேனும் ஒரு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியும். லாக்டவுன் முடிவுக்கு வந்ததும் இரு வாரத்துக்குள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகள் தந்தையிடம் மீண்டும் சென்றுவிடுவார்கள்.
ஏனெனில் குழந்தைகளின் கல்வி எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது. குழந்தைகள் தாயுடன் இருந்தால், விடுமுறை நாள்களில் தந்தையை சந்திக்க அனுமதிக்க வேண்டும். பெண் குழந்தை பருவ வயதை அடைந்துவருகிறாள். ஆகவே அவர் தாயின் அரவணைப்பில் இருப்பதே சிறந்ததாகும். எதிர்மனுதாரர் தனது குழந்தைகள் அவரது பாட்டியிடம் வளர்வதாக கூறியுள்ளார். இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. இருப்பினும் தாயிடம் கிடைக்கும் ஆதரவை விட வேறு சிறந்த ஆதரவு எதுவும் இருக்க முடியாது” என கூறியிருந்தார்.
தன்னை விட்டு பிரிந்த மனைவி வேலையில்லாமல் இருப்பதால், அவர் குழந்தைகளுக்கு வசதிகளை வழங்க முடியாது என்ற ராணுவ அலுவலரின் வாதத்துக்கும் நீதிமன்றம் உடன்படவில்லை. மேலும் நீதிபதி, “தாயின் நிதி சுதந்திரம் 'குழந்தைகள் யாருடன் இருப்பது என்பதற்கான சிக்கலை தீர்மானிப்பதற்கான அளவுகோலாக இருக்க முடியாது" என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி ராணுவ அலுவலரின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையும் படிங்க: ஈரானில், வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள சாராயம் அருந்திய 728 பேர் உயிரிழப்பு!