பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டினால் வரும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி குப்பைகளைச் சேகரிக்கும் நபராக மாறியுள்ளார்.
தங்களை அறியாமலே சுற்றுப்புறத்தை மாசுபடுத்திவரும் மக்களுக்கு, பிளாஸ்டிக் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே, பொறியியல் படித்துள்ள அபிமன்யு மிஸ்ரா, தனது வேலையை துறந்து இந்தச் சமூக சேவையை ஆற்றிவருகிறார்.
பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த, கடந்த இரண்டு ஆண்டுகளாக அபிமன்யு தனது உடல் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களை அணிந்து, பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்துவருகிறார். இவரது தோற்றத்தைக் கண்டு இவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் சில முறை திருடன் என்றும் கூட மக்கள் தவறாக கருதுகின்றனர்
இதுகுறித்து அபிமன்யு கூறுகையில், "எனது குறிக்கோள் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் வரும் அபாயங்களை மக்கள் மத்தியில் பரப்புவதுதான். மக்களின் கவனத்தை என் மீது கொண்டுவர, எனது உடல் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களை அணிந்து கொள்கிறேன். இப்படி சுற்றுவதால், பலரும் என்னை கேலி செய்தனர், ஆனாலும் நான் என் குறிக்கோளில் தெளிவாக உள்ளேன்" என்றார்.
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்காக குப்பையை சேகரிக்கும் பொறியாளர் இவரது இந்த முயற்சியை பலரும் கிண்டல் செய்தபோதும், பிளாஸ்டிக்கிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அவர் துளியும் மனம் தளரவில்லை. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் அபிமன்யு பங்கேற்றுள்ளார்.
சுயலநலமற்ற அபிமன்யு மிஸ்ராவை போல சிலர், தங்கள் பொறுப்புகளை உணர்ந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்ற போராடி வருகின்றனர். நாமும் ஒரு சமூகமாக பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிராக களம்கண்டால் மாற்றம் நிச்சயமே!
இதையும் படிங்க: பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து சிறுவர்கள் தயாரிக்கும் அழகிய ரோபோகள்!