ராஜஸ்தானில் நொடிக்கு நொடி அரசியல் திருப்பம் அரங்கேறிவருகிறது. மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் நீண்ட நாள்களாக நிலவிவந்த பனிப்போர், சில நாள்களுக்கு முன் கடும் மோதலாக வெடித்தது. இதனால், பைலட் மாநிலத்தின் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும், துணை முதலமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். பைலட் மூலம் ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டம் தீட்டிவருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டிவருகிறது.
இதனிடையே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் ஃபருக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டு காவலிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கும், சச்சினின் நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி தந்துள்ள உமர், பாகலுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.