டெல்லி: மத்திய அமைச்சர் வெளியிட்ட நேற்றைய அறிவிப்பில் உள்ள அந்நிய நேரடி முதலீட்டின் விழுக்காடு உயர்வு, இந்தியாவின் பாதுகாப்பு கட்டமைப்பை அசுர வளர்ச்சிக்கு உயர்த்தும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த முடிவால் ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றின் கட்டமைப்பு பலம் பெறும். இது நாட்டின் பாதுகாப்பு அம்சத்தில் பெரும் மாற்றங்களை கொண்டு வர முடியும் என உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மே 12ஆம் தேதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து, பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என்ற பெயரில் பல கட்டங்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
நான்காம் கட்டமான நேற்றைய (மே16) அறிவிப்பில் நிலக்கரி, கனிமங்கள், பாதுகாப்பு தளவாட உற்பத்தி, விமானத்துறை, விண்வெளி, அணுசக்தி உள்பட 8 துறைகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
அவர் அறிவிப்பில் கூறியதாவது:
- ராணுவ தளவாட உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் வகையில் 'மேக் இன் இந்தியா’ திட்டம் பயன்படுத்தப்படும்.
- பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்களை தயாரிக்க அந்நிய நேரடி முதலீடு 49 விழுக்காட்டிலிருந்து 74 விழுக்காடு வரை நீட்டிக்கப்படும்
- ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் நிறுவனங்களாக மாற்றப்படும்
- பாதுகாப்பு உபகரணங்களின் இறக்குமதியை குறைத்து உள்நாட்டில் கொள்முதல் செய்ய புதிய விதிமுறை அமல்படுத்தப்படும்.
- ராணுவ தளவாடங்கள் இறக்குமதி மசோதா விரைவில் அறிமுகம்.