இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்துவருகிற கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள், சாலையோரக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் வேலைவாய்ப்பை முற்றிலுமாக இழந்துள்ள கூலித் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த கிராமங்களை நோக்கி சிறு குழந்தைகளையும், வயதானவர்களையும் தோளில் சுமந்துகொண்டு, நகரத்தை விட்டு வெளியேறிவருகின்றனர்.
நீண்டதூரம் பயணப்படும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் துயரத்தைப் போக்கும் வகையில் அவர்களின் பயணத்திற்கான செலவை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி செலுத்துவதாக அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்திருந்தார். இதனையடுத்து, இந்தியா முழுவதுமுள்ள அக்கட்சியினர் ஊரடங்கால் சிக்கித்தவிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிக்கித்தவித்து வந்த தொழிலாளர்களுக்கு அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்ப 1,000 பேருந்துகளை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்து அம்மாநில அரசிடம் ஒப்படைத்தார்.
பேருந்துகள் தலைநகர் லக்னோவுக்கு வந்து சேர்ந்த நிலையில், அவற்றைச் சோதனை செய்த நிர்வாகம் 297 பேருந்துகளுக்கு உரிய தகுதிச் சான்றிதழோ, காப்பீடோ இல்லை என்று கூறி பயணத்திற்குத் தடை விதித்தது. மேலும், ஆவண மோசடியில் ஈடுபட்டதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லுவை கைது செய்தது.