ஜம்மு காஷ்மீரின் சிறப்புத் தகுதியை ரத்து செய்யும் முன், காஷ்மீரில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். மேலும், அங்குள்ள முக்கியத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இணையத் தொடர்பையும் துண்டித்தனர். இதில், ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃப்ரூக் அப்துல்லாவும் வீட்டுக் காவலில் இருந்தார். சிறப்புப் பிரிவு 370ஐ நீக்கி, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்பும் கூட, காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட இடத்திலேதான் இருந்துவருகிறது.
மேலும், வீட்டுக் காவலிலிருந்த தலைவர்களையும் மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளை கொண்டாட மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தார். அம்மாநாட்டில் ஃபரூக் அப்துல்லாவையும் அழைப்பதாக முடிவு செய்தார்.
ஆனால், காஷ்மீருக்குள் எந்தத் தலைவர்களையும் அனுமதிக்காமல் இருந்ததாலும் அப்துல்லாவை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்ததாலும் உச்ச நீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், சென்னையில் செப். 15ஆம் தேதி நடைபெற்ற அண்ணா மாநாட்டுக்காக ஃபரூக் அப்துல்லாவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை எனக் குறிப்பிட்ட வைகோ, அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என கோரிக்கைவிடுத்திருந்தார்.
ஆனால் வழக்கு விசாரணை தள்ளிப்போனதால் நேற்று நடந்த மாநாட்டில் அவருக்கு அழைப்பு விடுக்க முடியவில்லை.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஃபரூக் அப்துல்லா காவலில் இருக்கிறாரா என கேள்வியெழுப்பியதற்கு அரசுத் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் துஷார் மேத்தா, இது குறித்து மாநில நிர்வாகத்திடம் தகவல் கேட்க கால அவகாசம் கேட்டார். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என உத்தரவிட்டனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகம் ஃபரூக் அப்துல்லாவை பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், ஃபரூக் அப்துல்லாவின் வீடு தற்காலிக சிறையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஃபரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லா முதலமைச்சராக இருந்தபோது ஜம்மு - காஷ்மீரில் பொது பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தினார். அதன்படி, மாநிலத்தின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும்விதமாக செயல்படும் நபரை இரண்டு ஆண்டுகள் காவலில் வைக்கலாம் என இச்சட்டம் கூறுகிறது.
வீட்டுக் காவலிலிருந்த ஃபரூக் அப்துல்லா திடீரென பொது பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மக்களவையில் உள் துறை அமைச்சர் அமித் ஷா, ஃபரூக் அப்துல்லாவை நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.