சமீபத்தில் இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை நோக்கிப் பேரணி நடத்தப்போவதாக சமீபத்தில் அறிவித்தனர்.
இச்சூழலில் பஞ்சாப் விவசாயிகள் தங்கள் மாநிலத்தில் நுழைவதைத் தடுக்கும்வகையில் மாநில எல்லைகளுக்குச் சீல்வைக்கப்படும் என்று ஹரியானா பாஜக அரசு அறிவித்தது. மேலும், கரோனா காரணமாக டெல்லி காவல் துறையும் போராட்டத்திற்கு அனுமதியை மறுத்திருந்தது.
இந்நிலையில், பஞ்சாப் விவசாயிகள் ஹரியானாவிற்கு இன்று நுழைய முயன்றபோது ஹரியானா காவல் துறையினர் தண்ணீர் பீரங்கி மூலம் நீரைப் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர். காகர் நதி பாலத்தில் இச்சம்பவம் நடைபெற்றது.
இது குறித்த காணொலி ஒன்றை பகிர்ந்த ராகுல் காந்தி, மத்திய அரசின் கொடூரங்களை விவசாயிகள் உறுதியுடன் எதிர் கொள்ளவதாக இந்தியில் பதிவிட்டுள்ளார். மேலும், உறுதியுடன் போராடும் விவசாயிகளைப் பாராட்டுவதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.