டெல்லி:மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து டெல்லியில், விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். நாடுமுழுவதும், இந்தப்போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள், அடையாள உண்ணாவிரதங்கள் போன்றவை நடைபெற்றுவருகிறது. கனடா பிரதமரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
ஆனால், சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படாததால், போராட்டமானது தொடர்ந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், சில அரசியல் கட்சிகள் விவசாயிகளை குழுப்பிவருவதாகவும், மத்திய அரசுக்கு எதிர்ப்பதற்காக வேளாண் சட்டங்கள் குறித்த பொய் செய்திகளை சில குழுக்கள் பரப்பிவருவதாகவும் தெரிவித்து ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இரண்டு நாட்களுக்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். விவசாயிகளின் குழப்பத்தை தெளிவுபடுத்துவதற்காகவே அந்த கடிதத்தை எழுதியதாக வேளாண் துறை அமைச்சர் தெரிவித்தார்.