தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தால் பேராபத்து - பஞ்சாப் முதலமைச்சர்

சண்டிகர்: விவசாய மசோதாக்களுக்கு எதிரான ரயில் மறியல் போராட்டம் தொடர்ந்தால் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Farmers' protests continue
Farmers' protests continue

By

Published : Oct 9, 2020, 5:13 PM IST

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் விவசாயம் தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக உள்ளதாக குற்றஞ்சாட்டி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்திலும் விவசாயிகள் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் உள்ள 22 மாவட்டங்களில் சுமார் 70க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகளை அமைத்து விவசாயிகள் போக்குவரத்தை முற்றிலும் முடக்கியுள்ளனர். ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதால், பஞ்சாப் மாநிலத்திற்கு தேவையான நிலக்கரி எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அளித்த பேட்டியில், "மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இருப்பினும், மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் செல்வதை அனுமதிக்க ரயில் மறியல் போராட்டத்தை விவசாயிகள் தளர்த்திக்கொள்ள வேண்டும்.

தற்போது அறுவடை செய்யப்பட்ட நெல் மற்றும் கோதுமையை சேமிக்க இடங்களை ஏற்படுத்த வேண்டும். தொடர் போராட்டம் காரணமாக சேமிப்பு இடங்களில் ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ள நெல் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருள்களை வேறு பகுதிகளுக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிதாக அறுவடை செய்யப்படும் பொருள்களை சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், தொடர் போராட்டம் காரணமாக கடும் நிலக்கரி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனல்மின் நிலையங்களில் அடுத்த சில நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது. அதுவும் தீர்த்து விட்டால், அனல்மின் நிலையங்களை மூடுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் மாநிலம் முழுவதும் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்படும்" என்று அவர் கூறினார்.

மேலும், விவசாயிகளின் போராட்டம் காரணமாக உரங்களைகூட மாநிலத்திற்குள் எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details