கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
இணைய சேவை முடக்கப்பட்டதற்கும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பாடகர் ரிஹான்னா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், மாடல் மியா கலிபா ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் பலர் குரல் கொடுத்து வரும் நிலையில், அவர்களின் போராட்டத்தை ஜனநாயக நெறிமுறைகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இதுபோன்ற விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதற்கு முன்பு, உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். இம்மாதிரியான விவகாரங்களின் முறையான புரிதல்களை மேற்கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் பரபரப்பான கருத்துகளை பதிவிடும் பிரபலங்களின் செயல் பொறுப்பற்றதாக உள்ளது.
இம்மாதிரியான போராட்டங்களை இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகளோடு ஒப்பிட்டு அரசியல் ரீதியாக பார்க்க வேண்டும். அரசு மற்றும் சம்பந்தப்பட்ட விவசாய குழுக்களின் முயற்சிகளுக்கு இது முட்டுக்கட்டை போடுகிறது.
நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதங்கள் நடத்தப்பட்டதற்கு பிறகே, வேளாண் துறை தொடர்பான சீர்திருத்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த சீர்திருத்தங்கள் சந்தையை விரிவாக்கியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.