ஹரியானா மாநிலம் சிர்சா நகரில் பாஜக சார்பில் நேற்று மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது. அதில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நாட்டா கலந்துகொண்டார். பேரணியில் பேசிய அவர், "விவசாயிகள், ஏழைகள், சமூகத்தில் சுரண்டப்படுபவர்கள் என்று ஒரு காலத்தில் புறக்கணிக்கப்பட்ட அனைவரும், தற்போது மைய நீரோட்டத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மத்தியிலுள்ள நரேந்திர மோடியின் அரசும், மாநிலத்திலுள்ள மனோகர் லால் அரசும்தான் இதற்குக் காரணம்.
பல்வேறு பேரணிகள் மூலம் அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்தப்படுகின்றன. அனைவரது நலனுக்காகவும் அரசு செயல்படுகிறது என்பதைக் காட்டும்விதமாகவே இது உள்ளது. பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன" என்றார்.