மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ் கலந்து கொண்டார். அப்போது ஈ டிவி பாரத் செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியைக் காண்போம்.
வேளாண் மசோதா எதிர்ப்புப் போராட்டங்கள் கர்நாடகாவில் எந்த நிலையில் உள்ளன?
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்தச் சட்டங்கள் சீர்திருத்தம் தொடர்பானது அல்ல மாறாக நிலங்களை சிதைக்கக்கூடியவை என அவர்கள் தெரிவிக்கின்றனர். பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் மட்டும் போராட்டங்களில் ஈடுபடவில்லை. நாடு முழுவதும் விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இந்தச் சட்டத்தை காங்கிரஸ் கட்சியினர்தான் எதிர்க்கின்றனர் என்றும், சில இடைத்தரகர்கள் மூலம் அவர்கள் செயல்படுகின்றனர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். இங்கே காங்கிரஸ் கட்சியினர் எங்கு உள்ளனர்? எனக்கு ஒரே ஒருவரைக் காண்பியுங்கள். தங்களது எதிர்காலத் தலைமுறையை பாதிக்கும் இந்தச் சட்டங்களை விவசாயிகள் எதிர்க்கின்றனர்.
விவசாயத்தில் கார்ப்பரேட் சட்டங்களை இது அறிமுகப்படுத்துகிறது. விவசாயிகள் இதை விரும்பவில்லை. அதனால்தான் நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் வரும் 25ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஒன்றிணைந்து தாங்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை அரசாங்கத்திற்குக் காண்பிக்கப்போகும் நாள் அது.