ஜம்மு :மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து சட்டவிரோதமாகப் பறிக்கப்பட்ட நிலம் மீட்டெடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் வேளாண் நிதி உதவித்திட்டத்தின் (கிசான் சம்மன்) சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், "வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்களது நில உரிமையை இழப்பார்கள் என்று தவறான தகவல் பரவிவருகிறது. அப்பாவி விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறித்து லாபம் அடைந்துவருபவர்களிடமிருந்து, அந்த நிலம் மீட்டெடுக்கப்படும். இதன்மூலம் விவசாயிகளின் நில உரிமை பாதுகாக்கப்படும்.
இந்தப் புதிய சட்டங்கள் மூலம் வேளாண் துறை ஜனநாயகமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே நாடு, ஒரே வேளாண் சந்தை என்ற இலக்கை அடைய முடியும். தங்களது விலைப் பொருள்களுக்கான சிறந்த விலையை விவசாயிகளே நிர்ணயித்துக்கொள்ள முடியும்.