தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்து ஒடிசா அருகே அதி தீவிர புயலாக மாறியது.
இந்த புயலானது, இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோபால்பூர்-சந்த்பாலிக்கு இடையே காலை 10 மணிக்கு கரையை கடந்தது.
சாலையில் வீழ்ந்து கிடக்கும் மரம்
அப்போது, மணிக்கு 245 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளி காற்றில், புவனேஷ்வர் ரயில் நிலையம் முழுவதும் பலத்த சேதமடைந்தது. அதேபோல், பெரும் அளவிலான மரங்களும் சாலையில் சாய்ந்ததால் புவனேஷ்வர் முழுவதும் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.
இதற்கிடையே, அந்த புயலானது மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்து வருவதாக அறிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று இரவு 08.30 மணிக்கு மேற்கு வங்கத்தை புயல் தாக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அடுத்த 48 மணி நேரத்திற்குதான் மேற்கொள்ள இருந்த பரப்புரையை ரத்து செய்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. அதேபோல், மேலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, புயலின் கோரத்தாண்டவத்தால் ஒடிசாவின் புரி, புவனேஷ்வர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதமடைந்துள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.