உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாகப் பரவிவருகிறது. மூன்றாம் கட்டப் பரவலை அடையும் நிலையில், அதன் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கத் தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமலில் வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடித்து, கட்டாயமாக முகக்கவசங்கள் அணிந்து, மக்கள் வெளியே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ள சூழலில் திருமணம், இறப்பு, மருத்துவ அவசரத் தேவைக்காக இ-பாஸ்கள் வழங்கப்பட்டு, கூட்டம் கூடுவது கண்காணிப்பிற்குள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், பில்வாரா மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட அளவைக் கடந்து பகட்டான வகையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
கடந்த ஜூன் 13ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த திருமணத்தை அடுத்து, மூன்று நாள்களில் மணமகன் ரிசுலின் தாத்தா காய்ச்சல் வந்து உயிரிழந்ததாக அறிய முடிகிறது. அவரை பரிசோதனை செய்தபோது, அவர் கோவிட்-19 பாதிப்பிற்குள்ளாகி இறந்தது தெரியவந்ததை அடுத்து, இந்த திருமண விவகாரம் பூதாகரமாக மாறியது.
இது தொடர்பாக வழக்குப் பதிந்த காவல் துறையினர் குடும்பத்தினரிடம் மேற்கொண்ட விசாரணையில், அனுமதிக்கப்பட்ட விருந்தினர்களின் எண்ணிக்கையை விட 250 பேர் அதிகமாக கலந்து கொண்ட திருமணத்தில், தகுந்த தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்காமல், முகக் கவசங்களை அணியாமல் விதிமுறைகளை மீறியது தெரிய வந்தது.
திருமணத்தில் கலந்துகொண்டவர்களிடம் தொடர்ந்து பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதில் மணமகனின் அத்தை மற்றும் மாமாவும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது, அத்திருமணத்தில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு பில்வாரா மாவட்ட நீதிபதி ராஜேந்திர பட் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. அப்போது, கரோனா விதிமுறைகளை மீறி, திருமணத்தை ஏற்பாடு செய்திருந்த மணமகனின் தந்தை கீஸு லால் ரதியிடமிருந்து 3 நாள்களுக்குள், 6 லட்சத்து 26 ஆயிரத்து 600 ரூபாயை அபராதமாக பெற்று, ராஜஸ்தான் மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்றும்; அத்திருமணத்தால் கோவிட்-19 தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவோருக்கு அரசு செலவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.