ஜம்மு - காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் இணையம் மீண்டும் துண்டிக்கப்படுமென உள்துறை அமைச்சகரின் ட்விட்டர் பக்கத்திலிருந்து அறிவிப்பு ஒன்று வெளியானது. இது சமூக ஊடகங்களில் நேற்று (ஜூன் 29) காட்டுத் தீ போல பரவியது. இந்நிலையில், இணையம் துண்டிப்பு என்பது தவறான தகவல் என்றும் அந்த ட்விட்டர் பதிவு போலியானது என்றும் உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பெயரில் வெளியான ஒரு தவறான ட்விட்டர் பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் இயங்கிவரும் அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவை தடைசெய்யப்படும் என்று அமைச்சர் கூறியதாக சொல்லும் அந்த ட்வீட் போலியானது என்று உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்த விரும்புகிறது" என தெரிவித்தார்.