ஒடிசா மாநிலம், 17ஆவது மக்களவைத் தேர்தலில் அஸ்கா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அனிதா சுபாதர்ஷினியை இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் பிரமிளா பிசோய் (பிஜு ஜனதா தளம் கட்சி). அஸ்கா மக்களவைத் தொகுதியில் எத்தனையோ படித்தவர்களையும், பணம் படைத்தவர்களையும் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பிருந்த போதும், விவசாயக் குடும்பத்தில் பிறந்து மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த பிரமிளா பிசோய் என்ற பெயரைத்தான் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தன் கட்சியின் வேட்பாளராக அறிவித்தார். அஸ்கா மக்களவைத் தேர்தல் முடிவு நவீன் பட்நாயக் எடுத்த முடிவு சரி என்பதை உறுதிசெய்தது.
68 வயதான பிரமிளா பிசோய், ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலத்தைக் கொண்டுள்ள ஏழ்மையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மூத்த மகன் ஒரு டீக்கடை நடத்திவருகிறார். இளைய மகன் மெக்கானிக் கடை ஒன்றை நடத்திவருகிறார். பிசோயிக்கு நிரந்தர வருமானம் என்று எதுவுமில்லை. கோதுமை, ராகி விவசாயத்தை நம்பிதான் காலம் தள்ளிவருகிறார். அவரது ஆண்டு வருமானம் ரூ.10,000 - 12,000 மட்டுமே, கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர்.
மூன்றாம் வகுப்புவரை மட்டுமே பள்ளி சென்ற பிசோயிக்கு ஒடியா மொழி மட்டுமே பேசத் தெரியும். ஐந்து வயதிலேயே அவருக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டது. இளம் வயதிலேயே வாழ்வதற்கு கடுமையாக போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். குறைந்த ஊதியத்தில் அங்கன்வாடி பள்ளியில் சமையல் பணியாளராக பணியாற்றிவந்தார்.
பெண்களின் முன்னேற்றம் குறித்த சிந்தனையுடைய பிசோய், 18 ஆண்டுகளுக்கு மேல் பெண்கள் சுய உதவிக் குழுவின் பிரதிநிதியாக செயல்பட்டிருக்கிறார். 70-க்கும் அதிகமான பெண்கள் சுய உதவிக் குழுவின் பிரதிநிதியாக செயல்பட்ட பிசோய், ஒடிசா அரசின் மிஷன் சக்தி (பெண்களுக்கான சுய உதவிக் குழு இயக்கம்) திட்டத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். தற்போது அஸ்கா மக்களின் மாபெரும் தலைவராக வளர்ந்துநிற்கிறார்.