அனைத்து மனிதகுலங்களும் எந்தவித பாகுபாடும் இல்லாமல், சுதந்திரமாகவும், சமத்துவத்துடனும் வாழவேண்டும் என்பதே ஐக்கிய நாடுகளின் (UN) லட்சியம். பூமியில் பிறந்த அனைவருமே சரிசமமானவர்கள் என்று சர்வதேச அமைப்பு (The International Organization) நம்புகிறது. இந்த நோக்கத்திற்காக, டிசம்பர் 10, 1948 அன்று, உலக நாடுகளால் பாரிஸ் நகரில் ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்றுமுதல், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு நபருக்கும் பிறப்பால் சில உரிமைகள் உள்ளன. அவற்றை பாதுகாப்பது, சம்பந்தப்பட்ட அரசுகளின் பொறுப்பாகும். ஆனாலும், உலகம் முழுவதும் மக்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன. இனம், மதம், பிராந்தியம், பாலினம், சாதி, நிறம் மற்றும் தோற்றம் என்ற பெயரில், மக்கள் பாகுபாடு காட்டப்பட்டு வருகின்றனர். தங்கு தடையின்றி உரிமை மீறல் தொடர்கிறது. உரிமைகள் குறித்த வரலாற்றுச் சட்டமான 'மேக்னா கார்ட்டா', 'நியாயமான தீர்ப்பை'த் தவிர வேறு எந்தவகையிலும் சிவில் உரிமைகள் பயன்படுத்துவதைத் தடைசெய்ய முடியாது என்பதை தெளிவுபடுத்துகிறது.
தொடரும் உரிமை மீறல்
இந்தியாவில் இயற்றப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம்-1993, கடந்த ஜனவரி 8, 1994 முதல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டம், மனித உரிமைக் குழுக்களை மாநில அளவில் அமைக்க வேண்டும் என்கிறது. இந்தியா உள்பட பல நாடுகளில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாக, அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, வெனிசுலா, வங்கதேசம், ஈரான், ஈராக், ஏமன், துருக்கி மற்றும் சிரியாவில் மனித உரிமை மீறல்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக, அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. சிறுவர் உரிமை மீறல், கருத்துச்சுதந்திரம், பாலின அடிப்படையிலான அத்துமீறல், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சாதி-மத வன்முறைதவிர, சமூக சேவகர்கள், ஆர்வலர்களும் கொல்லப்படுகிறார்கள் என்பதையும், இது வெளிப்படுத்தியது.
இதில் மகளிர் உரிமைகள் தொடர்பாக - லலிதா முட்கல் vs இந்திய அரசு (1995), செல்வி vs கர்நாடக மாநிலம்; மேத்தா vs இந்திய அரசு (1986) ஆகிய வழக்குகள் குறிப்பிடத்தக்கவை. இதில், விசாகா வழிகாட்டுதல்களும் முக்கியமானவை. டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு, 'நஜ் பவுண்டேஷன்' (2009), ஹிஜ்ராக்களின் உரிமைக்காக செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நபருக்கும் குறைந்தபட்ச வசதிகளை அணுக உரிமை உண்டு. நமக்குத் தெரியும் 'பலவீன மாநிலங்களான' பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகியவற்றில் குடிநீர், போக்குவரத்து, மின்சாரம் போன்ற குறைந்தபட்ச வசதிகள்கூட இன்னும் கிடைக்கவில்லை.
தொழில்நுட்ப முன்னேற்றம் வளர்ந்தும், பலகோடி ரூபாய் செலவழித்தும்கூட, சில துறைகளில் சமூக வளர்ச்சியின் பற்றாக்குறையை, உரிமைகள் மீறுவதாக கருதப்படவேண்டும். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளானதன் பலன்களை அவர்களால் இன்னும் அனுபவிக்க முடியவில்லை என்பது வேதனையானது.
மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அகற்றுவது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும், இந்த செயல்முறை இன்னும் தொடர்கிறது. ஹெல்சின்கி-யின் பிரகடனப்படி, மருந்து பரிசோதனைக்கு மனிதர்களை பயன்படுத்துவது ஒரு குற்றம்.
ஆனால், சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் பத்ராச்சலம் பகுதி மலைவாழ் பெண்கள் மீது இத்தகைய பரிசோதனைகள் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெண்கள் கடத்தப்படுவது ஒரு குற்றமாகும். தெலுங்கு பேசும் மாநிலங்களின் நல்லமலா பகுதியில் உள்ள ஆதிவாசிகள் பணம் மற்றும் மதுபானங்கள் கொடுத்து ஏமாற்றப்படுகின்றனர்.
மகாராஷ்டிராவின் வறட்சி பாதித்த பகுதியான மராத்வாடாவின் கதை மிகவும் துயரமானது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பப்பை கிடையாது. ஏனென்றால் கரும்பு அறுவடைக்கு, கர்ப்பப்பை நீக்கம் செய்த பெண்களை மட்டுமே வேலைக்கு எடுக்கிறார்கள்.
இல்லையெனில், அவர்கள் மாதவிடாய் காலத்தில் மாதம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வராமல் போய்விடுவார்கள் என்பதால் தான். வேலையில்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் பெண்கள் தங்களின் கர்ப்பப்பையை அகற்றுகின்றனர். இது அவர்களின் உரிமைகளை கடுமையாக மீறுவதாகும்.
இழந்து நிற்கும் பழங்குடியினர்
பேசா சட்டம்-1996ன்(PESA ACT) படி, மலைவாழ் மக்கள் எனப்படும் பழங்குடி ஆதிவாசிகளுக்கு வனவளங்கள் மீது உரிமைஉண்டு. ஆனால் அவர்களின் அனுமதியின்றி வனவளங்கள் கண்மூடித்தனமாக பிரித்தெடுக்கப்பட்டு வருகிறது.