இந்தியாவில் வாட்ஸ்அப் செயலி, சமூக ஊடகமான பேஸ்புக் ஆகியவை பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து பலர் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வந்த நிலையில், தற்போது பேஸ்புக் நிறுவனம் அது குறித்து விளக்கமளித்துள்ளது.
பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறோமா? திடீர் சர்ச்சைக்கு பேஸ்புக் விளக்கம்! - பாஜாவுக்கு சாதகமாக பேஸ்புக்
டெல்லி : இந்தியாவில் பாஜகவுக்கு ஆதரவாக பேஸ்புக் நிறுவனம் செயல்பட்டு வருவதாக எழுந்த புகாருக்கு, பேஸ்புக் நிறுவனம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வன்முறையைத் தூண்டும் வகையிலான பேச்சுகள், கருத்துகளை நாங்கள் தடை செய்கிறோம். ஒரு நபரின் அரசியல் அதிகாரம், கட்சி பலம் ஆகியவற்றைக் குறித்து பொருட்படுத்தாமல் உலக அளவில் எங்களது கொள்கைகளைப் பின்பற்றி வருகிறோம். யார் வெறுக்கத்தக்க வகையில் பேசினாலும் அவர்களின் பின்புலம் குறித்து ஆராயாமல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறோம். விதிகள் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்றும் தொடர்ந்து தணிக்கை செய்யப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.