கொரோனா வைரஸ் பரவிவரும் சூழலில் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்களை இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எம்.பி. வசந்தகுமார் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை டெல்லியில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து வசந்தகுமார் தனது மனுவில், "எனது தொகுதியான கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் ஈரானில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவந்தனர். கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவிவரும் சூழலில் ஈரானிலும் அது தொடர்பான பாதிப்புகள் உள்ளதால் அங்கு பதற்றம் நிலவிவருகிறது.
இதனால் கன்னியாகுமரி மீனவர்கள் தாயகம் திரும்ப விரும்புகின்றனர். ஆனால், போதிய விமான வசதி இல்லாத காரணத்தினால் அவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர். ஈரானில் உள்ள தமிழ்நாடு மீனவர்களுக்கு போதிய உணவுகூட கிடைக்கவில்லை தங்குவதில் சிக்கல் இருந்துவருகிறது.