இது தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் செய்திக்குறிப்பில், "புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கரோனா பிரிவில் பணிபுரிந்துவந்த மருத்துவர் மிதுனா என்பவருக்கு மே 30ஆம் தேதி கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இவர்தான் புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் மருத்துவர் ஆவார். தற்போது அவர் குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.
இநநிலையில், அவர் கரோனாவிலிருந்து மீண்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், "எனக்கு கரோனா பாதிப்பில்லை என்ற வார்த்தையை கேட்க செல்போன் அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால், அதற்கு எதிர்மறையாக நடந்தது. என் வாழ்க்கையின் மறக்க முடியாத நாளாக மே 30ஆம் தேதி மாறியது. என் மனதில் அதிக பயம், உதவியற்றத்தன்மை கொண்ட உணர்வு தோன்றியது.
ஆம்புலன்ஸ் மூலமாக பாதுகாப்புக் கவச உடை அணிந்த மருத்துவப் பணியாளர்கள் என்னை அழைத்துச் செல்ல வீட்டிற்கு வருவார்கள் என்ற பயம் எனக்கு அதிகமாக இருந்தது. எனது மருத்துவக் கடமை அன்றுடன் முடிவடைந்தது. எனக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவுடன் எனக்குள் தைரியத்தை கொண்டுவர முயற்சி எடுத்தேன். என்னுடன் தங்கியிருந்த தோழிகளின் ஆதரவு மட்டுமே என்னை சகஜ நிலைக்குத் திரும்ப உதவியது.
என்னால் எனது நண்பர்களுக்கும், என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் வைரஸ் பரவியிருக்குமோ என்ற பயம் எனக்குள் தொற்றிக்கொண்டது.
எனது குடும்பத்தினருக்கு இதுகுறித்து தெரிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் அதைக் கேட்டு கலக்கமடைவார்கள் எனும் கவலையானது, பெற்றோரிடம் தெரிவிப்பதை தடுத்தது.
உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் யாருக்காவது வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், தயவுசெய்து அவர்களிடம் உங்களுக்கு எப்படி வைரஸ் பாதிப்பு வந்தது, உன்னால் எத்தனை பேருக்கு பரவியது, போன்ற கேள்விகளைக் கேட்டு அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள்.
அது பாதிக்கப்பட்டவரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.