இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய அவர் கூறுகையில், "ஆட்சியதிகாரத்தை நடுநிலையோடு வழிநடத்திடவும், வஞ்சிக்கப்படும் மக்களின் துயர் துடைக்கவும் இயலாத உத்தரப் பிரதேச அரசு ஆளும் அருகதையை இழந்துவிட்டது.
அதனை ஹத்ராஸ் இளம்பெண்ணின் கும்பல் பாலியல் வன்கொடூர வழக்கும், அரசினது மெத்தனமும் அம்பலப்படுத்திவிட்டது. இந்தக் கொடூர சம்பவத்தின் தொடக்கத்திலிருந்தே உ.பி. அரசு நேர்மையாக நடந்துகொள்ளவில்லை.
சாதியை, மதத்தைப் பார்த்து ஆராய்ந்து முடிவெடுப்பவர் ஆட்சியாளர் அல்ல. அந்த வகையில் செயல்பட முதலமைச்சர் யோகிக்கு எந்த உரிமையையும் அரசியல் அமைப்பு வழங்கவில்லை.
அப்படி, அவற்றைப் பார்த்துதான் ஒருவர் முடிவெடுப்பார் எனில் அவருக்கு அதிகாரத்தில் அமர தகுதியில்லை. எனவே, ஹத்ராஸ் கும்பல் வழக்கில் நடுநிலை தவறிய உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசைக் கலைக்க கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன்.
மேலும், ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கு சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றஓய்வுபெற்ற நீதிபதி அடங்கிய குழுவொன்றை அமைத்து விசாரணை நடத்தி உத்தரவிட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
உ.பி.யின் ஹத்ராஸ் மாவட்டத்தில் சாதி வெறியர்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பூல்கிராஹி கிராமத்தில் வாழ்ந்துவரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குப் பாதுகாப்பை வழங்குமாறு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கடந்த 4ஆம் தேதி சென்று சந்தித்த எங்கள் மீது 144 தடை உத்தரவை மீறியதாக உ.பி. காவல் துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளது.