லக்னோ:அகிலேஷ் யாதவ்வின் சீரிய செயல்களால் கவரப்பட்டு, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாதியில் இணைந்ததாக காங்கிரஸ் முன்னாள் பெண் எம்பி அன்னு டாண்டன் கூறினார்.
காங்கிரஸ் முன்னாள் பெண் எம்பி அன்னு டாண்டன் திங்கள்கிழமை (நவ2) முறைப்படி சமாஜ்வாதி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “நான் காங்கிரஸிலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைய முக்கிய காரணம் அகிலேஷ் யாதவ்தான்.
அவர் இளமையானவர். மாநிலத்தின் கல்வி வளர்ச்சி குறித்து விசாலமான பார்வையை கொண்டுள்ளார். நாட்டிலும், மாநிலத்தின் இக்கட்டான சூழல் நிலவுகிறது. தற்போதுநாம் மதசார்பற்ற சக்திகளை வலுப்படுத்த வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சிக்காக அகிலேஷின் ஓய்வறியா பணிகளை பார்க்கும்போது என் கண்ணுக்கு அவர் முதலமைச்சராக தெரிகிறார்” என்றார்.
முன்னதாக அன்னு டாண்டனின் ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து விலகினார்கள். அவர்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை முறைப்படி கட்சித் தலைமைக்கு அக்டோபர் 29ஆம் தேதி அனுப்பிவைத்தனர். அன்னு டாண்டன் உன்னாவ் தொகுதியின் முன்னாள் எம்.பி. ஆவார். அன்னு டாண்டன் கட்சியில் இணைந்தது குறித்து சமாஜ்வாதி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், “அன்னு டாண்டன், சமாஜ்வாதி கட்சியில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவர் தொகுதி எம்பி.,யாக இருந்தபோது, எந்நேரமும் மக்களின் நலன்கள் குறித்தே பேசினார். மக்கள் விரும்பும் ஒரு அடிமட்ட தலைவர் எங்களுக்கு கிடைத்துள்ளார். தற்போது மாநிலத்தில் அரசியல் மாற்றம் தேவை. ஏனெனில் தற்சமயம் ஆட்சியிலிருப்பவர்கள் மக்களின் நலன்களை சிந்திப்பவர்கள் அல்ல. மருத்துவ சேவைகள் சீர்குலைந்துள்ளன. மக்கள் மாற்றத்தை எதிர்நோக்குகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: சமாஜ்வாதியை வீழ்த்த பாஜக பக்கம் சாய்கிறாரா மாயாவதி?