மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் பதவியிலிருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் நேற்று பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியிலிருந்து தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவி விலகுவதாக அறிவித்தார். மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக சிவசேனாவின் உத்தவ் தாக்ரே நாளை (நவ.28) பதவி ஏற்க இருக்கிறார்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் நடந்து வரும் அரசியல் களேபரங்கள் குறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவருமான குமாரசாமி பட்னாவிஸைக் கிண்டல் செய்யும் வகையில் ட்விட் செய்துள்ளார். அதில், ' தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவி விலகியதை கேட்க வருத்தமாக உள்ளது. உலகத்திலேயே சந்தோசமான மனிதர் நானாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், வருத்தப்படுகிறேன்.
அவர் தான் என்னுடைய ஆட்சியை கர்நாடகாவில் கவிழ்ப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்தார். காலம் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்' என்று குமாரசாமி ட்விட் செய்துள்ளார்.
கர்நாடகாவில் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து கடந்த ஆண்டு ஆட்சி அமைத்தது. ஒரு வருடம் அங்கு இந்த கூட்டணி ஆட்சி நிலைத்தது. ஆனால், பாஜகவின் ஆபரேஷன் கமலா மூலம், இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. 17 காங்கிரஸ் - மஜத எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு அளித்து வந்த, ஆதரவை வாபஸ் வாங்கி, பதவி விலகினார்கள்.
இதனால், அங்கு பாஜகவின் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி அமைந்தது. இந்த 17 எம்எல்ஏக்களும் மும்பையில்தான் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இந்த ரிசார்ட் அரசியல் தான் கர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்த்தது. அப்போதைய பாஜக முதலமைச்சராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்தான், இந்த ஹோட்டலுக்கு போலீஸ் மூலம் பாதுகாப்பு வழங்கினார் என்று புகார் எழுந்தது.
அதைச் சுட்டிக்காட்டும் வகையில்தான் தற்போது குமாரசாமி இப்படி கிண்டல் செய்யும் வகையில் சூசகமாக ட்விட் செய்துள்ளார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க:தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா: மகாராஷ்டிராவில் உறுதியானது ஆட்சி மாற்றம்!