மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேப் பட்டாச்சார்ஜி வயது மூப்பு காரணமாக நுரையீரல் அடைப்பு போன்ற பிரச்னைகளை சந்தித்துவருகிறார். இந்த பிரச்னை காரணமாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்டஸ் மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். மருத்துவர் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். அவர் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்றுவருகிறார்.
அவருக்கு நுரையீரல் பாதிப்புகள் இருப்பதால் சுவாசிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என உறுதியானது. புத்ததேப் பட்டாச்சார்ஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்பவுள்ளார்.
சிகிச்சைக்கு ஏற்ப அவரது உடல்நிலை ஒத்துழைத்து வருவதால் தொடர்ந்து அவருக்கு வீட்டிலிருந்து ஸ்டீராய்டு மருந்துகள், பிசியோதெரபி அளிக்கப்படும். அவரது உடல்நிலை குறித்து மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை முதலமைச்சராக புத்ததேப் பட்டாச்சார்ஜி பதவி வகித்தார். மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிலிருந்து இறங்கியதும், கடந்த 2015ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் குழு உறுப்பினர் பதவியிலிருந்து அவர் விலகினார். அதன்பின் 2018ஆம் ஆண்டு மாநில செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.