ஹைதராபாத் (தெலங்கானா):ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பரப்புரை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஓவைசி பாதுகாக்கும் ரோகிங்யாக்களை, நாங்கள் தூக்கி எறிவோம்” என்று பெங்களூரு (தெற்கு) எம்.பி. தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார்.
தேஜஸ்வி சூர்யா மேலும் கூறுகையில், “சட்டவிரோதமாக நாட்டில் வாழும் ஒவ்வொரு ஊடுருவல்காரர்களும் அகற்றப்படுவார்கள். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இது ஓவைசியின் டிஸ்னிலேண்ட், ட்ரீம்லேண்ட் கிடையாது. ரோகிங்யாக்களை அவர் பாதுகாக்க நினைக்கிறார்கள். நாங்கள் அவர்களை அகற்றுவோம்” என்றார்.
ஹைதராபாத் நகரை பாக்யா நகர் என்று மாற்ற வேண்டும் என்பது குறித்து பேசுகையில், “இது பெயரை மாற்றுவது அல்ல, மக்கள் தொகை சார்ந்தது. பழைய ஹைதராபாத் நகரில் இந்து மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறுகின்றனர். அங்கு என்ன நடக்கிறது? பழைய குடியிருப்பு பகுதிகளிலிருந்து இந்துக்கள் வெளியேற ஏன் நிர்பந்திக்கப்படுகிறார்கள்? இந்த அரசியலுக்கு யார் பொறுப்பு? ஓவைசியா?” என்றார்.
தெலங்கானா மாநிலத்துக்கு உரிய நிதி வழங்க மத்திய பாஜக அரசு மறுக்கிறதே என்ற கேள்விக்கு, “தெலங்கானா மாநிலத்துக்கு ஏற்கனவே போதுமான நிதி வழங்கப்பட்டுள்ளது. முதலில் எந்தத் திட்டத்துக்கு எவ்வளவு நிதி செலவளிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை தெலங்கானா அரசு வழங்கட்டும். இந்த பணத்தால் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்வுக்கு நெருக்கமாக உள்ள ஒப்பந்ததாரர்கள் பயன்பெறுகிறார்கள். இதனை மக்கள் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள்” என்றார்.