பிகார் மாநில சட்டப் பேரவை தேர்தலின் முதற் கட்ட பரப்புரை நேற்று (அக்.26) மாலை 5 மணியுடன் நிறைவடைந்த நிலையில், முதற்கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கு நாளை(அக்-28) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
முசாபர்பூரில் உள்ள சக்ரா விதான் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டபோது பேசிய முதலமைச்சர் நிதீஷ்குமார், "பிகாரில் குற்றங்கள் குறைந்துவிட்டன. மத்திய அரசு தரவுகளின்படி, மாநிலம் இப்போது 23 வது இடத்தில் உள்ளது. நாங்கள் ஒரு நாளும் விளம்பரத்திற்காக பணிகளைச் செய்ததில்லை. முழு ஆர்வத்துடன் வேலைகளில் ஈடுபடுகிறோம்.
ஆனால் சிலர் தங்களின் விளம்பரத்திற்காக மட்டுமே வேலை செய்வது போல் காட்டிக் கொள்கின்றனர். வாக்குறுதிகளை அளித்து தங்களைத் தானே விளம்பரம் செய்து கொள்வதிலேயே சிலர் மும்முரம் காட்டுகின்றனர். அறிவும் அனுபவமும் இல்லாதவர்கள் என்னை விமர்சிக்கிறார்கள். ஒட்டுமொத்த பிகாரையும் எங்கள் குடும்பமாக நினைக்கிறோம்.
ஆனால் சிலர் ரத்த பந்தத்தையே குடும்பமாக நினைக்கின்றார்கள்" என்றார். இதற்குப் பதில் அளிக்கும் விதமாகப் பேசிய தேஜஸ்வி, "எனக்கு எதிராக நிதிஷ்குமார் பயன்படுத்திய தகாத வார்த்தைகள் அனைத்தையும் வாழ்த்துகளாகவே எடுத்துக்கொள்வேன். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிதிஷ்குமார் சோர்ந்து விட்டார்.
இப்ப நினைத்ததையெல்லாம் அவர் பேசிக் கொண்டு வருகிறார். இம்முறை, வளர்ச்சி வேலைவாய்ப்பு ஆகிய முக்கிய பிரச்சினைகளுக்கே மக்கள் வாக்களிப்பர்" என்றார்.
பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதையடுத்து அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நவம்பர் 10 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 7 கோடியே 29 லட்சத்து 27 ஆயிரத்து 396 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இந்நிலையில், நாளை மறுநாள் (அக்.28) முதற்கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.